திங்கள், 18 ஏப்ரல், 2016

ஏன் இப்படி

லேசானக் காற்றில்
சிறகடிக்கும் சிறகின்
சுதந்திரமோர்
கிணற்று நிலா....

சமுதாய பந்தத்தில்
இருக்கும் சுதந்திரத்தை
வெறும் விம்பமாய்
ஆக்கும் அந்த
ஒன்றை,

ஏதோவோர் முடிச்சுக்குள் சாமத்தியமாய் செயல்படும் 
அந்தவொன்றை,

நசுக்கி கசக்கி
கொன்றொழிக்கும்
திரவத்தையோ
திண்மத்தையோ
ஏதோவோர் ஆயுதத்தை
கண்டுப்பிடிக்க
புள்ளியிடுகிறேன்....

செடிகளின் துளிர்
இயற்கையின் பிடியிலும்
கருகிடாது மென்மை
காக்கின்றனர் சிலர்.
அன்பிலும் அறிவிலும்
இன்பம் சேர்கிறது....

பச்சை இலைகளையும்
கருகச்செய்து தீ
மூட்டுகின்றனர் சிலர்.
ஆத்திரமும் ஆதங்கமும்
வேதனையில் 
உயிர்பெறுகிறது....

பறந்துக்கொண்டுதான்
இருக்கிறோம்
சுகம் பேசும்
நீள/நீல வானில்
அல்ல,
முட்கள் முனங்கும்
நீசர்களின் நிலத்தில்....

நீதி உறங்க
நிம்மதி அழுகிறது...

ம்ம்ம்...
சொல்லி 
மாறப்போவதில்லை,
சொல்லாமல்
செல்கிறேன்
சொல்ல வந்ததை....

ஃ........ ......... .......
ம் ம் ம்....
கொஞ்சம் பொறுங்கள்
சொல்லிவிட்டே செல்கிறேன்....

நெருசல் நிறைந்த
பேரூந்து
பத்திரமாய் உள்
நுளைந்தாள்
மிதிப்பலகையில் தொங்கியது
இளைஞர்கள் உதவியோடு....

நெருசல் குறைந்த
பேரூந்து
மரியாதையும் பக்குவமும்
கூடியதான முகத்தோற்றம்
அருகே அமர்ந்தாள்
.... ... ... .... 
அவனொரு ஆண் 
என்பதை
அவளுக்கு தெரியப்படுத்த
முயன்றதை
நான் சொல்ல விரும்பவில்லை....

அவளே பேச்சுவாக்கில்
கொஞ்சம் தடம்மாறும்
போது
"சொல்லுமா தங்கச்சி" என
சின்னவளை ஆற்றுப்படுத்துகிறான்
யாரோ ஓர் அண்ணன்...

மகளின் உயர் படிப்பிற்கு
கையேந்துகிற குடிசைத்
தாயிற்கு 
உதவியக் கையின்
நச்சரிப்பிற்கு
உடல் தீண்டவும் அனுமதிக்
கேட்கிறான்
மிக கௌரவமாக....

ஏன் இப்படி....?
எங்கள் சுதந்திரம்
நீர்குவளைக்குள்குள்தானா?

....பிரிய சகி....
2016.04.18

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

இன்று யாருக்குத் தடைகள் அவசியம்...?

ஆயிரம் கேள்விகளுக்கான
ஆணி வேர் 
என் நெஞ்சுக்குழியில் சிக்கி
என் குறுதி ஓட்டத்தில் 
மிதக்கிறது....!

சற்றுத் தூரமான 
புதிய இடங்களெங்கும்
தேவையிருந்தும்
தனியே போகவிடமாட்டாள்
தாய்....!

அதனால்தான் 
சங்கீதம் பயிலும் 
என் சிறு வயது ஆசையும்
நிராசையானது....!

இப்படி 
என்னைத்தாண்டி 
சென்ற ஆசைகள் 
எனக்குள் புதைந்து 
இன்றும் ஓலமிடுகிறது...!

இதனை அறியாமலேயேதான்
நான் வளர்ந்து நிற்பதில்
பெருமைக் கொள்கிறார்கள்
என் வீடார்...!

"உன் தோழிகள் 
அதைச் செய்கிறார்களா?
உன் வகுப்பில் வேறு யாரும்
அங்கு செல்கிறார்களா? 
நீ மட்டும் ஏன்? 
உனக்கு மட்டும் எதற்கு?"

இத்தகைய 
கேள்விகளால்தான்
என் தனித்துவம் 
ஊனமுற்ற குழந்தையாய்
இன்னும் வளர்க்கப்படாமல்
இருக்கிறது...!

வெளியில் 
பேய்கள் நடமாட்டம்
அதிகமென்றா 
என்னைத் தனியே
அனுமதிக்கவில்லை...?

இல்லை,
என் பள்ளிப்பருவக் கால
இளைஞர்கள் நடமாட்டம்
அதிகமென்று...!

அதே இளைஞர் 
நடமாட்டத்தின் 
மத்தியில் நடமாட
என் தம்பிகளுக்கு 
எந்தத் தடையுமிருக்கவில்லை...!

"ஏன்" என்ற 
அப்போதைய என் 
கேள்விக்கு பதில்
"அவர்கள் ஆம்பளைகள்"

என் சமூகத்தில் 
அன்றைய என்னிடத்தில்
இன்று எந்தப்பெண்ணோ...?

....பிரிய சகி....
2016.04.17

திங்கள், 11 ஏப்ரல், 2016

மறக்க மறுக்கும் வார்த்தை

அவன் இதயத்தில்
ஒட்டிக்கொண்ட அவள்
நினைவுகளை
ஓசையின்றி ஓரமாய்
ஒதுங்கச் சொன்னான்...!

பாசத்தை வெளிப்படுத்த
சொல்லி சொல்லி
உயிர் உருக்கிய
அந்த வேற்றுமொழிச் சொல்
மட்டும் ஓயாமல் 
அவன் செவிகளில் ஒலித்துக்கொண்டேயிருந்தது...!

....பிரிய சகி....
2016.04.12

என் கவிதையின் நிழல்

எதிர்பார்க்கவில்லை தான்
உன் அன்பை நான்
அதை நீீயாகக் கொடுத்தாலும்
வேண்டாம் என்றுதான்
சொல்லத் தோன்றும்
அதை நானாக் 
கொடுப்பதாயும் இல்லை 
இருந்தும்... 
யோசித்துக்கொண்டேயிருக்கிறேன்
உன்னை என்னிதயத்தின்
அருகிலேயே வைத்திருக்கும்
மார்க்கத்தை...!

பூவுக்குள் ஒளிந்திருக்கும்
தேன் துளியை 
உறிஞ்சிடத்தான் வண்டொன்று
காற்றிலே அலைகையில்,
எனக்குள் ஒளிந்திருக்கும்
உன் மீதான 
என் பாசத்தை உறிஞ்சிட 
உன் யோசனை தனிமையில்
அலைவதாய்
உன்னால் ஓய்வு மறந்த
என் நித்திரையின்
கனவில்தான் உணர்கிறேன்...!

எனக்குள் இரகசியமாகிய
உன் மீதான அன்பை
நான் உன்னில்
காண்பேனோ இல்லையோ
இடையிடையே வந்துப்போகும் 
உன் நினைவுகளை
சேமிக்க மட்டும் 
செய்கிறேன் _ என்
கவிதைகளுக்காய்...!

என் கவிதைகளிளாவது
உனக்கான என் அன்பு
ஒட்டிக்கொள்ளட்டுமே...!

....பிரிய சகி....
2016.04.11

திங்கள், 4 ஏப்ரல், 2016

பிரிவின் வலி..!

என்னருகில் இருந்து
ஏதோ சிந்தனையில்
நீ இருந்தாய்.!

நீ நீயாகவே
இருக்கிறாய் என்றே
நான் நானாக 
இருந்தேன்.!!

உன்னை தாண்டி
உன் நிழல் கடக்கையில்
ஏதோ... ஏதோ...
என் இதயத்தில் ஏதோ..!!

கண்ணிலிருந்து பாயும்
காவேரி நதியோடு
சேரவே பிரசவிக்க
தவிக்கும் வலியின்
துடிப்பேயது..!!

கண்ணீரோ.. பிரிவின்
வேதனையை சொல்ல
துடிக்கிறது ..!!

கண்ணீர் பிரிவை
சொல்லிவிட்டால்
உணர்வு உறவை
நெருக்கி விடுமே..!!

அதனால்தான்
கண்ணிடமிருந்து
கண்ணீரை இதயத்திற்குள்
வாங்கிக் கொண்டேன்..!!

வலியுடனே பிரிகிறேன்
மீண்டும் ஒன்று
சேருவோம் என்ற
நம்பிக்கையில்..!!

- பிரிய சகி -

நான் உன்னை காதலிக்கிறேன்.!

நான் அன்பிற்காக
ஏங்கும் பொழுதெல்லாம்
நீயே..
எனக்குள் தோன்றுகிறாய்..!!

நீயோ..
என் ஏக்கம்
புரியாமல் என்னை
தவிப்பில் ஆழ்த்துகிறாய்..!!

எனக்குள் அன்பாகி
கரைந்து போன
உன்னை நீ
கண்டு கொள்வதுதான்
எப்போது.??

எனக்குள் உன்னை
நீ கண்ட
பொழுதிலாவது
உன் இதயக்கதவை
திறந்திடுவாயா.??

இத்தனை நாள்
ஏக்கங்கள் எல்லாம்
கண்ணீராய் உன்னில்
சங்கமிப்பதற்கு...

காதலை சொல்லிடத்தான்
காரணம் தேடி
பேச்சு கொடுக்கிறேன்
உன்னிடம்..!!

ஆனாலும் 
உன் பேச்சை
இரசிப்பதிலேயே
நான் என்
காதலையும்
மறந்து போகிறேன்..!!

அந்த பேச்சின்
இடையிலே
கவலை எல்லாம்
மறந்து
குழந்தையாய் நீயும்
சிரித்துவிட்டால்...

அதுதான்
என் வாழ்வில்
நான் பெறும்
முதல் பாக்கியம்..!!

உன் கண்கள்
அது வெறும் கண்களல்ல
அதில்தான் என்
அன்பு குடியிறுக்கிறது
உனக்கும்
தெரியாமலேயே..!!

இல்லை...
நேருக்கு நேர்
பார்க்கையிலே
கண்டிருக்க மாட்டாயா.?
உந்தன் குடியிறுப்பை
எந்தன் கண்களில்.!!

கண்டிருப்பாய்
இந்த காளையின்
கயல்களில்
நான் சொல்லிடாத 
காதலை.!!

கள்ளியடி நீ..
கருக் கொண்ட 
மேகம்
தன்னைத்தான் சேரும்
என மண்
அறியாததா.??

எனக்குள் தெவிட்டாத
தேனாகிப் போன
காதலை நீயும்
சுவைத்து 
கொண்டுதானிருப்பாய்..!!

உன் இதயத்தில்
சிறு குடிசை கட்டி
வாழ காத்திருக்கிறேன்
அன்பே..
உன் காதலை
சுவாசித்தபடி...

நான் உன்னை..!!
- பிரிய சகி -

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மண்ணுக்கு உரம் மட்டும்தானா நாங்கள்...?

தன் குழந்தை 
வளர்ச்சிக்காகவும் 
ஆரோக்கியத்திற்காகவும்
உதிரத்தை அருந்க்கொடுப்பாள்,
தன் அழகினையும் 
இழப்பாள் தாய்....!

எந்த வளர்ச்சியும்
கிட்டப்போவதில்லை 
அடிப் பாதம் கூட
ஆரோக்கியம் காணப்போதில்லை,
என அறிந்தும் 
ஒவ்வொரு நாளும் 
அங்கம் அங்கமாய் 
அழகிழக்கிறாள்
மலையகப் பெண்....!

அட்டைகளின்
உறிஞ்சல்களிலும்
தேயிலைக் காம்பு
கீறல்களிலும்
உதிரம் பகிர்கிறாள்
மலையக மண்ணுக்கு 
மலையகப் பெண்...!

எது எப்படியோ
அரசியல் குழந்தைகளின்
ஆரோக்கியமும் அழகும்
அதி சீராகவே வளர்கிறது...!

பிரிய சகி
2016.04.03

இறை உள்ளம் [கடவுள் (கட+உள்)]

என் மாளிகையின்
கற்கள் ஒவ்வொன்றும்
என்னை நோக்கி
எறியப்பட்டவையே...!

ஆனால் அவைகளால்
என் உடலையோ
என் உள்ளத்தையோ
காயப்படுத்த முடியவில்லை...!

எறியப்பட்டவையானாலும்
என்னுள்ளம் நுழைந்ததும்
என் அகக் கற்களானது...!

அனைத்தும் என்
ஆழ் மனதைப் பதப்படுத்தும்
கல் நூல்கள் போலும்....!

அதனால்தான் என்
பூஜை அறையும்
உருவானது அவைகளால்...!

....பிரிய சகி.....
2016.04.03