திங்கள், 27 ஜூன், 2016

மலரும் மொட்டொன்று பிறக்கையில்

கண்ணாடி தெளிவிற்க்குள்
புன்னகையின் முனங்களில்
இதழ் அலைய
அதில் இரகசியம் 
ஒழிகையில்
அழகு நனைகிறது....!
மோகன மோட்சம்
புதிதாய் பிறந்து
எண்ணங்களைப்
புரட்டிவிட்ட
வசிய துளிக்குள்
மௌனமாகையில்
யௌவனம் கரைகிறது....!
தங்கை என் கைகோர்த்து
நெடுஞ்சாலை வழியே
நடந்து செல்கையில்
கடந்து சென்ற
காற்றோடு கலந்து
கோர்ந்திருந்த கைகளின்
ஸ்பரிசத்தோடு உறவாடி
சென்றது....!
வீட்டிற்குள் தம்பியோடு
போட்ட செல்லச் சண்டையில்
என்னிலிருந்து விடுப்பட்ட
தனிமையோடு
தவறிவிடப்பட்ட அது,
எங்கே விடுபட்டது...?
என யோசிக்கச் செய்து
மீண்டும் இணைந்திட்ட
அதே தனிமையோடு
தொற்றிக்கொண்டது...!
நான் கொஞ்சிய
மழலையோடு மலர்ந்திட்ட
பாசத்தில் பூத்த
மென்மையில்...
அதுவும் ஒரு மலராகி
என்னிரு பக்க கன்னங்களிலும்
பூசி விளையாடிக்கொள்ளச்
சொல்லி கெஞ்சியது...!
தோழியோடு தோள் சாய்ந்து
குரங்கு சேட்டைகளோடு
எடுத்துக்கொண்ட
சுயப்பதிவில்
இடைப்புகுந்து
கட்புலன் இல்லா உருவமாய்
வரிகளற்ற பாடலோடு
என் இதயத்துள்
உலா வரலானது...!
நண்பனோடு 
அரட்டையடித்து
நட்புணர்ந்து 
பேசிய வேளையில்
ஒழிந்து நின்று 
வேடிக்கைப் பார்த்திட்ட 
அதன் ஏக்கத்தை 
புரிந்துக்கொள்ளச் சொல்லி
வற்புறுத்தியது....!
அம்மா மடிமீது 
குழந்தையாகி
குந்துகையயில்
இலகிய இதயசாரலோடு
போட்டியிடுவதற்காய்
என் சிறு வெற்றிடத்திலிருந்து
முளைத்திட்ட அதை
மணந்திடவும்
ஆசைக்காட்டியது...!
இறுதியாய் இதயம்
இளைப்பாறும் இந் நேரத்தில்
சத்தமில்லா சங்கீதமாய்
என் வாழ்வின் பயன
லயத்தோடு இளைந்திட்ட
அந்த மறைப்பொருளை
இதயத்தில் இறுக்கி
"நீ யார். ?" என கேட்க...,
"உன் வாழ்வோடு
ஒட்டிக்கொள்ள 
உன் பருவ ஏவலில்
உன் உள்ளத்திலிருந்து
பிறப்பிக்கப்பட்ட
ஓர் புனிதம்..." என்கிறது...!
ம்ம்ம்ம்ம்.....
என் சுவைகளுக்குள்
புதிதாய் பிறக்க
காதல் சுவை 
கருகொள்கிறது போலும்
என் இதய அறைக்குள்...!
ஸ்ஸ்ஸ்....
நட்சத்திரங்கள் எல்லாம்
ஒற்றைக் கண்ணடிக்கின்றன.
விடியும் வரை காத்திருக்கும்
விடிவெள்ளிக்கு பதில் 
சொல்லவும் வேண்டும்.
இரவை கொஞ்சம்
அமைதிபடுத்துங்கள்....,
என் இறுதி சடங்கிலும்
காதலை 
உணர்த்தப்போகும்
அந்த உறவை 
தேர்ந்தெடுக்க
வேண்டாமோ....!
....பிரியசகி...

வெள்ளி, 24 ஜூன், 2016

ஆதியப்பிரசவம்

மனித மனங்களில்
மரணமில்லா மதியாக
மனசாட்சிக்குள் 
பிரகாசமாய்
அன்பு....!

தேகத் தூண்டலில்
மதி மயங்கி 
உடல் கோர்த்து
உணர்ச்சி உருவாக்கி
புணர்ச்சிப் பூரிப்பில்
பூமி மடியில்
ஓர் உயிர்....,

ஜாதகக் கண்ணாடியில்
துடிக்கும் இதயதுடிப்பை
மட்டும் கண்டு
ஏதோவோர் உயிர்க்கரம்
உறவென அணைத்தால்
அன்பு பூவாகாதோ....!

உயிர் குடித்த
யுத்த வேரில் முளைத்த
வறுமைப்பூக்களை
சூழ்நிலை வியாபார
நோக்கமின்றி
பூக்களின் தேகத்தை
விலைப்பேசாது
தன் சமூகப்பெண் 
மரியாதைக்காய்
முழு சமூகத்திற்குமாக
ஆண் உழைத்தால்
அன்பு கனியாகாதோ...!

சிந்தனைப் பின்னல்
மூளையில்,
உடல் மறைப்பில்
கவனமின்றி சாலையில்...,

அதி நவீன 
உடைகளிலேயே
கவனமாய் ஓர் யுவதி,
பூலோக நகர்வு 
அறியாத 
சாலை ஆத்மா 
உடையிலும்
கவனம் செலுத்தினால்
அன்பு தேனாகாதோ...!

இன்னும் எத்தனையோ
மனசாட்சிக்குள்
அன்பு பிரகாசிக்கலாம்...!

அந்த பிரகாசத்தில்
மட்டுமே
பூமி மொத்தமும்
ஒரேடியாய்
"பித்து" என பெயர்
பெறாமலிருக்கும்...!

....பிரியகி....

வியாழன், 23 ஜூன், 2016

பறவையின் இரு சிறகுகள்

என் மனதை 
அவ்வண்ணமே
அவளுக்கு ஒப்புவிப்பேன்...!

என் பற்றிய 
கேள்விகளுக்கான
அத்தனை பதில்களும்
அவள் வசம்....!

கண்ணாடியில் 
நான் போல்
தெளிவு குறையாது
அவளுள் என்னை
கடத்துவேன்...!

எங்கள் செவிகளுக்குள்
நுழையும் ஊர் செய்திகளை
வேறு இரு செவிகளுக்கும்
கசியாது இருவர் மன்றம் ஆக்கி
ஆராய்வோம்...!

எங்களுக்குள்
நழுவும் கருத்து
மோதல்களிலும்
இணையும் கரவொலியோடு
சிரிப்பொலியும்
பக்கவாத்தியமாகும்....!

என் நாட்குறிப்பின்
கதைகள் எல்லாமும்
அவள் படித்து சுவைத்தவைதான்....!

நான் படித்துமுடித்த
கவிதையின் என் சொந்த கருத்து 
அவளென்றிருந்தேன்...!

அவள் உள்ளம் ஏற்ற வாழ்க்கை காதலை வேறொருவர் நான்
சொல்லி அறியும் வரை...!
அவள் என் தோழி!


....பிரியசகி....



23.06.2016

சனி, 18 ஜூன், 2016

கருவில் சிதைந்த காதல்

தூரலுக்காய் கருக்கொண்ட மேகங்களை நான்
சரிசெய்யும் வேளை..,

எனக்கான கருக்கட்டல்
என்னை ஆராதிக்கும்
மழைத்தூரல்,
வண்ணப்பூக்களாய்
அதன் கீழ்
நனைந்திட நான்...!

உச்சி நெற்றியில் 
உயிர் முத்தம் 
என் சுவாச நாளங்களில்
பாசத்திரவம்...!

அணைக்காத கரங்கள் 
காதல் சிலை வடிக்கும்
கண்கள் 
அணைத்துப்பேசும்
வார்த்தைகள்...!

ஸ்ருதியோடு இணையும் ராகம்,
தினமொரு வாழ்க்கைப்
பாடல்....
இணையும் இரு
கருத்துக்களில்....!

இப்படி எத்தனையோ
எதிர்கால வரலாறு
எண்ணங்களில்
எதார்த்தமாய்
உருண்டோடும் பந்தாக...!

என் சரிசெய்தலின் போதே
கரு கொண்ட மேகம்
பொய் மழை மேகமாய் ஆகிப்போனது... 
வெறுமையானது இதயம்...!

அத்தோடு
சிதைந்துப்போனது
என் எண்ணங்களும்தான்...

....பிரியசகி.... 
18.06.2016