சனி, 17 டிசம்பர், 2016

வகுப்பறை முதல் நாள்....

காற்றிலே வீசும்
பூ வாசம்
மழலைகளில் வீசும்
மொழி வாசம்....!

நட்சத்திரப் பூக்கள்
நிறைந்த வகுப்பறை,
ஒவ்வொருவரும்
பேச்சுப் பழகும்
செல்லக் கிளிகள்....!

மழை நீர் சேமித்த
செடி இலைகள்
அசைந்து ,
தானே தூவிய
பூத்தூரலாய்
சிட்டுகளின் குரலோசை....!

"வகுப்பறை முகாமைத்துவம்"
எனும் நூலில்
சிக்கிய சிலந்தியென நான்....!

கொதித்துப் பொங்கும்
பாலின் குதூகலம் அடங்க
உள் நுழைகிறேன்....!

சிறகு விரிக்க
எத்தனிக்கும் சிட்டுகளை
ஓரிடம் செதுக்கி
பதிப்பதில்தான்
கொஞ்சம் சஞ்சலப்பட்டு போனது
மனம்....!

"எங்கள் புது ஆசிரியை"
என செல்லமாய்
ஒட்டிக்கொண்ட 
பிஞ்சு உள்ளங்களில்
அழகாய் அப்பிக்கொண்டது
எனதுள்ளமும் தான்....!

இனி என் சந்தோசம்
பரவும் ஒரே இடம்...
நிரந்தர நிம்மதி உறங்கும்
இடம்
மழலைகளின் உள்ளம்
ஒன்றே.....!

....பிரியசகி....
2016.12.17

வெள்ளி, 16 டிசம்பர், 2016

வெளிச்சம்

இருள் வானில்
வான் பிரகாசிக்க
மின்னும் நட்சத்திரங்களை
தீப்பொறிகள் தெளித்து
அணைக்க எத்தனிக்கும்
விதி அறியாத 
இந்தச் சின்ன உலகம்...!

உயிர்கள் உருவாக்கத்தின்
இரகசியம் தேடியழைகின்றனர்
மனித அபிமானிகள்....!

உள்ளதை கண்டுபிடித்திடும்
மனித அறிவியல்.
உருவான கதை மட்டும்
ஏனோ... 
உளரிதான் வைக்கப்படுகிறது....!

உள்ளம்...
உணர்வு...
உணர்ச்சி...
இவை வெற்று உடலுக்குள்
காலங்கள் கடந்த
ஆத்மாக்கள் சுரக்கும்
அமுர்த விம்பங்கள்....!

அந்த விம்பங்கள்
தேகத்துக்குள் நதியென
ஓடும்
போகுமிடம் அறியாமலே...!

தான் நிலைக்க
தான் அற்ற பிறர்
நிலை அழிக்கத் துடிப்பதுதான்
அவ் விம்பங்களில்
தெறிக்கும் கூத்து....!

அன்பென்ற பூக்களின்
செயற்கை வாசம்
அகிலம் எங்கும் வீசும்,
யுத்த வன்முறைகளும்
அங்கேயே வேசம் போடும்....!

உண்மை வெளிச்சம்
மனிதவுடல் கண்களிலில்லை
இறை ஆத்மா ஒன்றே
உணரும்....!

பார் தாண்டிய பார்வையை
வீசி உண்மையை
உணர்...
அழிப்பதை மற...
நிலைப்பதையும் மற...!

அதோ தீப்பொறிகள்
ஒரு புறம்
மின்னும் நட்சத்திரங்கள்
ஒரு புறம்...
இறை ஒளி
இதமாக....
மூங்கில் காடுகளில்....!

பிரியசகி
2016.12.16

மேக காதல்...

என் வீட்டு முற்றத்திற்கு
தினம் வந்து போகும்
சிட்டுக்குருவி
என் கண் பார்த்து
பேசுகின்றது...!
... ... ... ....

குட்டி குட்டி
மழைத்துளிகளை
எனக்குள் தாங்கி
உருவமில்லா கடவுள்
சிலையாய் உருவான
ஒர் உணர்வு....!

என் ஆசைகளை 
காட்சியாக்கி
மேகங்களின் அசைவில்
இசையெடுத்து
என் இதயத்துடிப்பில்
ஒளியெடுத்து
பூஜித்த உணர்வு
அது....!

சாதாரண ஒருவருக்கு
பரிசளிக்க விருப்பமின்றி
பவித்திரமாய்
எனக்குள்ளேயே பதுக்கி 
வைத்த உணர்வு....!

இந்த அழகிய 
புனிதத்தை
மதிக்கத் தெரிந்த
ஒருவன்
எங்கிருக்கப் போகின்றான்...!

நெஞ்சம் இரும்பானது
பக்குவம் கூடானது
உணர்வை இருக்கி 
அறிவு பூட்டிக் கொண்டது
கசியவும் விடாமல்....!

சந்தோச பூக்களிலிருந்து
எழும்பி
பக்குவம் பூத்த
கண்களோடு
என் எதிர்கால
வாசத்தை
பேச்சிலே ஏந்தி
தாய்மையை
அசையும் கரங்களில்
சுரந்து வந்தான்
ஒருவன்.....,

நெஞ்சம் இளகி
பக்குவம் இன்னும்
பதமாகி
அறிவு திறந்து 
புனித உணர்வுக்கு
வழிவிட்டது....!

உருவமற்ற சிலை
உருக்கொண்ட 
ஆத்மாவானது...!

மேக இசை உயிர்பெற்றது
இரத்தத் துளிகளில்
மொட்டுக்கள்
மலர்ந்தன..!

"மேகா" என 
செல்ல பெயர் சூட்டி
தீப்பொறியின் மென்மைக்குள்
ஒருவித மௌனம் சேர்த்து
மனதுக்குள் காதலனானான்....!

என்று......
என் கண்ணுக்குள்
காதலை தொற்ற செய்து
மிகுதியை தொடக்கி

எதிர்கால கனவுகளோடு
மேக காதலாய்
பறந்து சென்றது
சிட்டுக்குருவி....!
... ... ... ...

மீண்டும் வருமா
வந்து அதன் அன்பு
பேசுமா..
கசிகின்ற காதலோடு
காத்திருக்கின்றேன்.

-பிரியசகி-
2016.12.16

புதன், 7 டிசம்பர், 2016

உங்கள் உணர்வு தலைப்புச் சொல்லும்

பூக்களின் சிரிப்பைத் 
தொட்டுப்பாருங்கள்...,
(மலர்களின் மலர்ச்சியை
மணந்துப் பாருங்கள்)
மலரும்.....,
மங்கும்...,
மக்கும்.....,
மடியும்.....,
மங்கிப்போவதை எண்ணி 
மலர மறுப்பதில்லை....!

பூப்பதும் மடிவதும்
இரு நிகழ்வுகளே....,
புவியசைவு நிகழ்வில்
இதென்ன ஆச்சர்யம்.....!

புல்லுக்கும் சொந்தமான
புதுமை புணர்ச்சியில்
பூத்தப் பூவை 
உன்னுள்ளங்கை மேடு 
உரசிப்பார்க்க 
ஆசைகொள்கையில்
சிறு சஞ்சலமும்
உள்ளத்தை உரசுவது
இயல்புதானோ.....?

அழகானப் பாசப்பூவை
ஆசையோடுப் பறித்து
நெஞ்சோடுப் 
பொத்திக்கொள்கிறாய்.....,
உடல் பிரியும்
கடைசி நிமிடத் துளியில்
உயிரிணையும்
நெற்றி முத்தப்பூ
என்றெண்ணி.....!

ஆனால்.......,
நாளின் ஒருப்பாதி
முடிந்து மறுப்பாதி
தொடங்கும் முன்னேயே
இளம் மலர் 
இளமை மாறமுன்
நகர்ந்துப் போய்விடலாம்.....!

அல்லது.....,
பொழிவு மறைந்து
பக்குவம் சேர்ந்து
பொன்னிறம் 
உடல் போர்த்தும் வரை,

நீ உள்ளெடுக்கும்
மூச்சுக்காற்றாக
மூச்சுக்குழலுக்குள்
பாசத் துளைகளிலும்
சண்டைத் துளைகளிலும்
பின், சமரசத்துளைகளிலும்
மாறி மாறி நுளைந்து
உன் இறப்பு வரை 
இசை மீட்கலாம்......!

எதுவெனிலும் 
உன் உள்ளம்
சொல்லுவதை செய்....
மலர்வதும் மங்குவதும்
இரு நிகழ்வுகள் தானே....???
காதலும்தான்......!!!

2016.12.07

உன் விரல்கள் தயங்காது....

பூக்களின் சிரிப்பைத் 
தொட்டுப்பாருங்கள்...,
மலரும்.....,
வாடும்....,
விழும்......,
வீழ்வதை எண்ணி 
மலர மறுப்பதில்லை....!

வீழ்வதும் எழுவதும்
இரு நிகழ்வுகள்.
இரண்டும் தொடர்வதில்
என்ன ஆச்சர்யம்.....!

ஏதோவோர் மலரை
வீழ்த்த உன் விரல்கள்
தயங்காது எழும்போது,
நீ இன்னொன்றால்
வீழ்த்ப்படுவதில் 
எங்கே புதுமை....!

2016.12.07