வியாழன், 31 டிசம்பர், 2015

திருமணத்திற்கு முதல் இராத்திரி....





நடுசாம கனவில்

என்னைச் சுற்றி திரிந்த
வண்ணத்துப் பூச்சிகளை
நேரில் கண்ட 
உள உணர்விலே
வாழ்க்கையை ரசிக்கலானேன்
அந்த நேரம்.....


பல குழுக்களும்
பல விதமாக 
புரிந்துக்கொள்ளும்
கடவுள் உண்மையை
நான் ஒருத்தி அறிந்திட்ட
உள உணர்விலே
வாழ்க்கையை இரசிக்கலானேன்
அந்த நேரம்....

என் வீட்டு முற்றத்தில்
வந்தமரும் மைனாக்களை
பிடித்திடும் ஆசையில்
முன்னெடுக்கும் ஓரடியிலேயே
வழமைப்போல் பறந்திடாது,
என் கையில் தானே
வந்து அமர்வதான
உள உணர்விலே
வாழ்க்கையை இரசிக்லானேன்
அந்த நேரம்....

அன்றுதான் பார்த்த
குழந்தை ஒன்று
கண்ட மறுநிமிடமே
தாய் கை நழுவி
தாவி வந்து
தலை சாய்த்து 
என் நெஞ்சோடு 
ஒட்டிக்கொண்டதான
உள உணர்விலே
வாழ்க்கையை இரசிக்கலானேன்
அந்த நேரம்....

இன்னொரு வாய்ப்பாக
மனிதன் சீரழிக்காத
இயற்கை உலகை
கடவுள்
மீண்டும் ஒரு முறை 
உருவாக்கித்தரப் போகிறான் 
என்றதான
உள உணர்விலே
வாழ்க்கையை இரசிக்கலானேன்
அந்த நேரம்....

என்னோடு படுத்துறங்கும்
இறுதி இராத்திரியில்
கண்ணீரோடு 
தாயவள்.... 
மதி தடவி தலைக் கோதி
அகக்கண்ணில் 
முழுதாய் இரசித்து,
முத்தம் பதித்த 
அந்த நேரம்
இத்தனை நாள் வாழ்க்கையின்
அர்த்தம் உணர்ந்து
இரசிக்கலானேன்
அவள் பாசத்தை....!

"விடிந்தால் என் மகள்
இன்னொருத்திக்கு மருமகள்
இனி நான் தூரத்து 
சொந்தமாகிவிடுவேனோ...."
ஏக்கத்திலும் அச்சத்திலும்
தாய் உறங்க முயற்சிக்கையில்

அவளுடனான என் 
இறுதி இராத்திரியில்
நானும் அவளை 
அணைக்கலானேன்
தூங்குவது போன்ற என்
பாவனையிலேயே....!

....பிரியசகி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக